மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு – அண்ணாமலை !!

அதிமுக ஆட்சியில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என அன்றைய முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் பிரதமரின் தனிப்பட்ட முடிவின் காரணமால் தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனிச்சாலை பகுதியில் பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாராளுமன்ற தேர்தலில் 80 லட்சம் பேர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்களை போல் இல்லை, இவர்களை போல் இல்லை என மக்கள் வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.

பாஜகவை பார்த்து நோட்டா கட்சி 1 சதவீத ஓட்டு கட்சி என்று நகையாடியவர்கள் எல்லாம் இன்று பதில் சொல்லும் வகையில் 18 சதவீத வாக்கு பெற்றுள்ளோம்.

கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் நானும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டதற்கு அதிமுகவினர் விமர்சனம் செய்தார்கள். அதிமுகவிற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்ந்தெடுத்து மதிப்பளிப்போம் என்பதற்கு கலைஞர் நூற்றாண்டு வெளியிட்டு விழாவே சாட்சி. எங்களை திமுக எதிரியாக ஏற்றுக்கொண்டது. தமிழகத்தின் வருங்காலம் எங்கே இருக்கின்றது. எங்கே செல்ல வேண்டும் என்று திமுகவினருக்கு தெரியும்.

எதிரியை அழைத்து அவருடைய தலைவருக்கு வணக்கம் வைக்க சொல்லி வேண்டியதால் சென்று வந்தோம். 5 முறை முதலமைச்சராக இருந்த ஒரே காரணத்தினால் கலைஞர் கருணாநிதிக்கு உரிய மரியாதையை மோடி கொடுத்துள்ளார்.அதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம்.

கூட்டணியில் இல்லாத போதும் எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டு பெருமைப்படுத்தியவர் மோடி. எம்ஜிஆரின் நாணய வெளியிட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருக்க வேண்டும். மோடியின் பக்கம் அதிமுகவினர் சென்றுவிடுவார்கள் என்பதால் அதிமுகவினர் பிரதமரை அழைக்கவில்லை.

எம்.ஜி.ஆர் நாணயத்தை மோடி வெளியிட்டிருந்தால் உலகம் முழுவதும் சென்றிருக்கும். எடப்பாடி நாணயத்தை வெளியிட்டதால் அவர் புகழ் பரவவில்லை.உதயகுமாரையும், செல்லூர் ராஜூவையும் மதுரையை தாண்டினால் யாருக்கும் தெரியாது.

எம்ஜிஆர் பெயரில் வாக்கை வாங்கி பழகியவர்கள். எம்ஜிஆருக்கு உரிய மரியாதை கெளரவம் பெற்றுத்தந்திருக்க வேண்டும்

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வர வேண்டிய திட்டம் கிடையாது. அதிமுக ஆட்சி காலத்தில் மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று முதலமைச்சர் விரும்பவில்லை.அவர் கொடுத்த கோப்பில் வேறொரு இடத்தில் அமைய வேண்டும் என்று தான் இருந்தது.

வட இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல தென்னிந்தியாவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என பிரதமர் விரும்பினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு. 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துவிடும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *