தமிழிசை சௌந்தரராஜன், தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும் !!

எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை விமர்சித்தது குறித்து விளக்களித்த தமிழிசை சௌந்தரராஜன், தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் அதிமுக – பாஜக மோதல் நாளுக்கு நாள் குடுமிப்புடி சண்டையாக மாறி வருகிறது. அதிலும் சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அண்ணாமலை, “எனக்கு நேர்மை பற்றி சொல்லித் தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மான்முள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை” என கடுமையாக விமர்சித்திருந்தார். இது சர்ச்சையாகிய நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கிருஷ்ண கோயிலில் வழிபாடு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும்.

அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால், என்னைப் பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை.

அதிமுகவுடன் பாஜக இனி எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக கருத்து சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது.

பின்பு அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம். எனவே மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி?

இதை வைத்து அண்ணாமலைக்கும் எனக்கும் சர்ச்சையை ஏற்படுத்திவிடக் கூடாது. எனது அணுகுமுறை வேறு, அவரது அணுகுமுறை வேறு. நானும் அதே கட்சியில் ஐந்தரை வருடங்கள் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தவள்தான். மாநிலத் தலைவராக அவரின் கருத்துகளை உறுதியாக சொல்கிறார்.

ஆனால், கட்சியின் கருத்து, நிர்வாகிகளின் கருத்து எல்லாம் கேட்கப்பட்டு, அதில் ஒரு முடிவுக்கு வரலாம்.

மாநிலத் தலைவரின் கருத்தை, அந்தக் காலப்பொழுதில் ஏற்றுக்கொள்வதுதான் ஒரு கட்சியின் காரியக்கர்த்தாக்களின் முடிவாக இருக்க முடியும். அதனால் அதை ஏற்கிறேன். ஒருகோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது எங்கள் குறிக்கோளாக இருக்கிறது. இப்போது எங்களின் முழு கவனம் அதில்தான் ” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *