திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

தொடர்ந்து 17 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்ற மு.க.ஸ்டாலின், முதலில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீடுகளை ஈர்த்தார். பின்னர் சிகாகோ சென்ற அவர் அங்குள்ள முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி தமிழகத்தில் தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அதன்படியே பல்வேறு முதலீடுகளையும் குவித்து வருகிறார்.
அந்தவகையில், ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2000 கோடியை முதலீடு செய்கிறது.
இந்நிறுவனம் திருச்சியில் தனது தொழிற்சாலையை அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation) நிறுவனம் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தொழிற்சாலையை ரூ.666 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இதன்மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தமும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை உலகின் 14 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.