வருகிற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆனது தமிழகத்தில் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிரமான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. தேர்தலை ஒட்டி பாஜக தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருச்சிக்கு வருகை புரிய உள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை நடைபெற இருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, காவல்துறை, தேர்தல் அலுவலர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில் மறுப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.