எல்லையோர மாவட்டங்களில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவு!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 151 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

அவர்களில் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அந்தபாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவக்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்த முழு தகவலையும் சுகாதாரத் துறைக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அறிகுறிகள்: காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனாலும், பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்தால், அனைத்து விதமான தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *