இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதன் மூலம் நிலையாள வளர்ச்சி வெற்றிகரமாக இருக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது – பிரதமர் நரேந்திர மோடி..!

அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். பயணத்தின் முதல் நாளில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்களைச் சந்தித்து அவர்களின் மத்தியில் உரையாற்றினார். அமெரிக்க பயணத்தின் கடைசி நாளில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 79வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

மனித குல வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தலில், 3வது முறையாக சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கி உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கினரின் குரலை எதிரொலிக்க இங்கு வந்துள்ளேன். உலகின் எதிர்காலம் குறித்து சர்வதேச நாடுகள் விவாதிக்கும்போது மனிதனை மையமாக கொண்ட அணுகுமுறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை. நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது. நிலையாள வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், மனித நலன், உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதன் மூலம் நிலையாள வளர்ச்சி வெற்றிகரமாக இருக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்தியா தன் வெற்றியின் அனுபவத்தை உலகளாவிய அளவில் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்வது அவசியம்.

உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தொடரும் நிலையில், மறுபுறம், சைபர் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியன புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இந்த விவகாரங்களில், உலகத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு சீரான ஒழுங்குமுறை தேவை. டிஜிட்டல் பொது கட்டமைப்பு என்பது ஒரு பாலமாக இருக்க வேண்டும். தடையாக இருக்கக்கூடாது.

உலக நலனுக்காக டிஜிட்டல் பொது கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நேபாளம், பாலஸ்தீனம், குவைத் நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான சந்திப்பில் காசாவின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர் மோடி, காசாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், பிரதமர் மோடி குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல் சபாவை சந்தித்து பேசினார். மேலும், நியூயார்க்கில் அமெரிக்காவின் 15 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா தனது 3வது ஆட்சிக் காலத்தில் 2029க்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *