முரசொலி செல்வம் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முரசொலி செல்வம்(84). இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார்.
முரசொலி நாளிதழுடன் 50 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த முரசொலி செல்வம் பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முரசொலி செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “கலைஞரின் மருமகனும், முரசொலி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவருமான முரசொலி செல்வம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
கலைஞரின் சகோதரி மகனான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றினார். அரசியலில் கலைஞருக்கு துணையாக இருந்தவர்.
அதன் காரணமாகவே பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். மிகவும் அமைதியான இயல்பு கொண்ட அவர், திமுக நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஆவார்.
முரசொலி செல்வம் அவர்களின் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் மு.க.ஸ்டாலின், மு.க.செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், முரசொலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.