சென்னை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இப்போதே பொதுமக்கள் வணிக வீதிகளில் குவியத் தொடங்கி விட்டனர்.
அதுவும் வார இறுதி நாட்களில் கூட்டத்தின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க இப்போதே பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.
இன்னும் 2 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே இடையில் இருப்பதால் அடுத்த 2 வாரங்களும் வார இறுதி நாட்களில் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குவிவார்கள்.
இந்த நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீஸார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் கூட்டம் அதிகளவில் காணமுடிந்தது. இந்த இடங்களில் போலீஸார் தற்போதே கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து அதன் மீது நின்றவாறு தொலை நோக்கி கருவி மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ள போலீஸார் அவர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவினால் கண்டுபிடித்து கொடுக்கும் வசதியையும் ஏற்படுத்தி அதன் மூலமாகவும் கண்காணிக்கின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் இந்தாண்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, அதில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் காவல் ஆணையர் நேரில் சென்று விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வார். இந்த ஆண்டும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.