பாஜக கட்சியின் முதல் உறுப்பினராக புதுப்பித்த பிரதமர் நரேந்திர மோடி !!

புதுடெல்லி:
பாஜக கட்சியின் முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவை நேற்று புதுப்பித்தார்.

பாஜக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் நாளிலேயே 47 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட உறுப்பினர் சேர்க்கையில் 6 கோடி பேர் பதிவு செய்து கொண்டனர்.

உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். குஜராத்தில் 85 லட்சம் பேரும், அசாம் மாநிலத்தில் 50 லட்சம் பேரும் உறுப்பினர்களாக சேர்ந்தனர். 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கை கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இது வரும் 15-ம் தேதி வரைநடைபெறவுள்ளது.

பாஜக உறுப்பினர்கள் குறைவாக உள்ள மக்களவை தொகுதி, சட்டப்பேரவை தொகுதி, ஜில்லாக்கள், மண்டலங்களில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உறுப்பினர் பதிவை பூத் அளவில் மேற்கொள்ள கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் பாஜக கட்சியின் முதல் உறுப்பினராக தனது பதிவை புதுப்பித்த பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பாஜக கட்சியின் முதல் உறுப்பினர் ஆனதில் பெருமிதம் கொள்கிறேன்.

இது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு உந்துதலை அளிக்கிறது. நமது தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜக.,வின் முதல் உறுப்பினர் ஆனது பெருமை.


இந்த இயக்கம் நமது கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு தொண்டர்களின் தீவிர பங்களிப்பை உறுதி செய்யும்.

கட்சியின் தீவிரஉறுப்பினராக இருக்க, பூத் அல்லது சட்டப்பேரவை தொகுதி அளவில் ஒருவர் 50 பேரையாவது உறுப்பினராக பதிவு செய்ய வைக்க வேண்டும்.

அதுபோன்ற உறுப்பினர்கள்தான் உட்கட்சி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்களாக இருக்க முடியும். அதே நேரத்தில், வரும் காலங்களில் கட்சிக்காக பணியாற்ற அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *