பயணி தவறவிட்ட தங்க நகைகளை, நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!!

சென்னை:
பயணி தவறவிட்ட தங்க நகைகளை, ஆட்டோ ஓட்டுநர் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் சக்திவேல் (53). இவர், குடும்பத்துடன் அவர் திருப்பூர் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி இரவு பேருந்தில் சென்னைக்கு வந்தார். சாலிகிராமம் அருகே 100 அடி சாலையில் இறங்கி 3 பைகளுடன் அங்கிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி எம்எம்டிஏ காலனியில் உள்ள அவரது வீட்டினருகே இறங்கி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது 2 பைகளை மட்டும் ஆட்டோவிலிருந்து எடுத்து வந்ததும், 7 பவுன் தங்க நகைகள் அடங்கிய ஒரு பையை ஆட்டோவில் மறந்துவிட்டதும் தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த சக்திவேல் சாலிகிராமம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி ஆட்டோ ஓட்டுநர் விவரம் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அமைந்தகரை, வ.உ.சி. தெருவில் வசித்து வரும் ஆரோக்கியதாஸ் (54) என்ற ஆட்டோ ஓட்டுநர் அரும்பாக்கம் காவல் நிலையம் வந்து தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க நகைகள் அடங்கிய பையை ஒப்படைத்து விவரங்களை கூறினார்.

போலீஸாரின் விசாரணையில், சக்திவேல் ஆட்டோவில் மறந்துவிட்ட தங்க நகைகள் அடங்கிய பையையே ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஒப்படைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் மூலம் நகைகள் சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை போலீஸாரும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *