ஆந்திராவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை சமாளிக்க தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் – முதல்வர் சந்திரபாபு அறிவுரை!!

ஹைதராபாத்:
ஆந்திராவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை சமாளிக்க தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் அமராவதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அமராவதி நகரை கட்டமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்துசந்திரபாபு நாயுடு பேசியதாவது:

தேசிய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த 1950-களில் 6.2 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், அது 2021-ல் 2.1 சதவீதமாக குறைந்தது. ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமானது தற்போது அதைவிட குறைந்து 1.6 சதவீதம் என்ற அளவில் மோசமான நிலையில் உள்ளது. இதனால், மாநிலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பது இளைய பருவத்தினரின் மக்கள் தொகை வேகமாக குறைய காரணமாகியுள்ளது. இதனை சரிசெய்ய தம்பதிகள்இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்வது அவசியம்.

அதிக குழந்தைகளை உடைய குடும்பங்களுக்கு ஊக்கத் தொகைவழங்க பரிசீலித்து வருகிறோம். இது, ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதை பெருமளவு ஊக்குவிக்கும்.

மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற முந்தைய சட்டத்தை ரத்து செய்துள்ளோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வர உள்ளோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.\

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *