காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை நேரத்திலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகவே, காஞ்சிபுரம் தென்னிந்தியாவின் ஆன்மீக நகரமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் நகரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. முக்தி தரும் ஏழு நகரங்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள்.
அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை ஏழு நகரங்களில் முக்தி தரும் நகரங்களாக இன்று மத நம்பிக்கைகள் தெரிகின்றன.
இந்த நகரங்களில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தாலும், இந்த நகரத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் குளித்தாலும், கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில் முக்தி தரும் ஏழு நகரங்களில் மொத்த நகரம் காஞ்சிபுரம் என அழைக்கப்படுகிறது. நகரேஷூ காஞ்சி (நகரங்கள் சிறந்த நகரம் காஞ்சி) என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சிபுரம் உள்ளது.
கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோவில். பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், பங்களிப்புடன்பல லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் நகரீஸ்வரர் திருக்கோயில் புணரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, அதிர்வெட்டுக்கள் முழங்க, கலசத்திலிருந்து புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
பின்னர் கோயில் கருவறையில் உள்ள நகரீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க வைத்தனர்.அதிகாலை நேரத்திலேயே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில் மூலவர் சிலையாக இருக்கும் சிவபெருமானை புராண காலகட்டத்தில் தேவலோகத்தில் இருந்து வந்து இந்திரனால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது.
இந்திரன் சிவபெருமானை நோக்கி இக்கோயிலில் , தான் செய்த பாவங்களிலிருந்து விடுபட சிவலிங்கத்தை பூஜை செய்து வந்ததாகவும் நம்பிக்கையாக இருந்து. மேலும் இங்கிருக்கும் சிவபெருமானை வணங்கி வந்த இந்திரனுக்கு பாவ விமோசனம் கிடைத்ததாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
எனவே இங்கு இருக்கும் அருள்மிகு நகரீஸ்வரரை பூஜை செய்து வணங்கி வருபவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் சிவபெருமானை வணங்கி செல்கின்றன.