திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம்!!

சென்னை:
திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது.

இதில் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்டன. சிலர் மயக்கமடைந்தனர். ஆசிரியர்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.

எனினும் 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல ஒரே நேரத்தில் பள்ளி முன்பு பெற்றோர்கள் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். காலையிலேயே வாயுக்கசிவு ஏற்பட்ட நிலையில் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினரிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமோனியா வாயு கசிந்துள்ளதா என்பதை அறிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் பள்ளி வளாகத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

அதில் வாயுக்கசிவின் காரணம் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர்களும் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “இந்த பள்ளியை சுற்றி அபாயகரமான வாயுக்களை கையாளும் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. ஒருவேளை தொழிற்சாலையில் இருந்து வெளியேறி இருந்தால், காற்று வீசும் திசையில் உள்ள பல பகுதிகளில் பாதிப்பு உணரப்பட்டிருக்கும்.

ஆனால், அவ்வாறு ஏதும் ஏற்படவில்லை. ஒரு பள்ளியில் மட்டுமே வாயுக்கசிவு உணரப்பட்டுள்ளது என்பதால், பள்ளி ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் வாயு கசிவு ஏற்பட்டிருக்க வேண்டும்” என்றனர். இந்நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *