ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது!! குளிக்க தடை விதிப்பு!!

ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் நீர்வரத்து சற்று படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு சென்றன.

நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரிசல் ஓட்டிகள் பரிசலை காவிரி ஆற்றின் கரையோரம் கமத்தி வைத்தனர்.

குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் பயணம் செல்ல முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *