ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்கவில்லை என்று அரசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனமழையால் ஊருக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில்
இந்த பாதையில் தற்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மறியலை கைவிட மாட்டோம். அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறினர்.