தமிழ்நாட்டில் பெஞ்சால் புயல், மழை ஏற்படுத்திய சேதம் குறித்து விவாதிக்க அவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என விசிக சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் திருமாவளவன் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நவம்பர் 23, 2024 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான பெஞ்சால் புயல், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்கும், தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும், சேதமடைந்த உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் மத்திய ஒன்றிய அரசிடம் ரூ. 2,475 கோடி வழங்கும்படிக் கேட்டுள்ளார்.
இந்தப் பேரழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிப்பதற்காக இந்த சபையின் அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
என அந்த ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்ற நோட்டீஸை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களும் அளித்துள்ளார்.