ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி!!

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செனாப் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 6) திறந்து வைத்தார். இதற்காக உதம்பூர் விமான நிலையம் வந்த பிரதமர், பின்னர் அங்கிருந்து சனாப் பாலம் பகுதிக்கு வருகை தந்தார். அவருடன் முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு பாலத்தில் நடந்து சென்றார். மேலும், பாலத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, பாலம் அமைக்க காரணமாக இருந்த பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த பாலம் 473 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கால நிலையிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.

இதனைத் தொடர்ந்து இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் செல்ல சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் போக்குவரத்து (யுஎஸ்பிஆர்எல்) திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கத்ராவில் ரூ.46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரஃபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை – 444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச்சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பில் உருவாக்கப்படும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி உயர் சிகிச்சை மருத்துவ மையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின்பு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு வருகை தந்திருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *