திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்: பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பரவசம்…..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

தீபத் திருவிழாவை யொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் 5 தேர்கள் வலம் வரும். மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.36 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெறும். மதியம் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெறும்.

தேரோட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் பராசக்தி அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

ரத வீதிகளில் அண்ணா மலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.

அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தேரோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *