சென்னை:
பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் குடும்ப உதவிநிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து இந்த நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்கள் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, குடும்ப உதவி நிதி வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.5 லட்சம், 15 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.3.75 லட்சம், 10 ஆண்டுகள் என்றால் ரூ.2.50 லட்சம், 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.1.25 லட்சம் என குடும்ப நிதிஉதவி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் கடந்த டிச.17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் .
நிவாரண நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கவனமாக பரிசீலித்த அரசு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர்கள் குடும்ப உதவிநிதியானது, 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியில் இருக்கும்போது இறந்தால் ரூ.10 லட்சமும், 15 ஆண்டுகள் பணியாற்றியி ருந்தால் ரூ.7.5 லட்சமும், 10 ஆண்டுகள் பணியாற்றிியருந்தால் ரூ.5 லட்சமும், 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.2.50 லட்சமும் நடைமுறையில் உள்ள விதிகள்படி, பத்திரிகையாளர்கள் குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் குடும்ப உதவிநிதி திட்டத்தில் உதவிபெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையைப் பெற்று, செய்தித்துறை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இ்த்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.
இத்திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.