புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.
பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். திணை மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நோய் இல்லாததால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. தூக்கமும், ஊட்டச்சத்தையும் சார்ந்தது. மருத்துவ அறிவியலும் தூக்கத்தில் கவனம் செலுத்துகிறது. அனைவரும் காலை வெயிலில் தங்களது நேரத்தை செலவிட வேண்டும்.
உங்களுக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். தேர்வு பயத்தை எதிர்கொள்ள வேண்டாம். மேலும் நீங்கள் உங்களை சவால் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள், நேர்மறைகளை கண்டறியுங்கள். உங்களை நீங்களே சவால் செய்வது எப்படி என்பதை அறிய உங்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். எப்போதும் முந்தைய முடிவுகளை விட சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும் என்று மாணவர்கள் கருதக்கூடாது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாணவர்களை அடைத்து வைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வத்தை ஆராய சுதந்திரம் வழங்க வேண்டும்.
தலைவர்களின் நடத்தையில் இருந்து மக்கள் குறிப்புகளை பெறுகிறார்கள். பேச்சுக்கள் மட்டுமே உதவாது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.