வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்க வேண்டும், தமிழக அரசு அறிவிக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, பாமக மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகளின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, அமமுக பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அரசியல் கணக்குக்காக நான் இங்கு வரவில்லை..
எங்களுக்கு வேண்டியது சமூகநீதி, உரிமை, நியாயம்.. 45 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார் எங்கள் மருத்துவர் அய்யா. எங்களுக்கு தேவை கல்வி, வேலைவாய்ப்பு. அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. சட்டம், அதிகாரம், நிதி என அனைத்தும் இருந்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு மனசுதான் இல்லை.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குள் சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க வேண்டும். தமிழக அரசு அறிவிக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.