சிவராத்திரியை முன்னிட்டு 50 லட்சம் மக்கள் காசிக்கு வருவார்கள் – துணை போலீஸ் கமிஷனர் சரவணன்!!

வாரணாசி:

இந்துக்களின் புனித நகராக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி திகழ்கிறது. இங்கு கங்கையில் நீராடுவதற்காகவும், காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் நாளை (புதன்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். அதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் செய்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவரும், வாரணாசி துணை போலீஸ் கமிஷனருமான சரவணன் கூறியதாவது:-

வாரணாசி நகரை பொறுத்தவரையில் 27 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இங்கு முக்கியமான நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து 22 லட்சம் மக்கள் வருகை தருவார்கள். இவர்கள் அனைவருக்கும் வசதிகளையும் நாங்கள் செய்து கொடுத்து வருகிறோம்.

குறிப்பாக நாளை சிவராத்திரியை முன்னிட்டு 50 லட்சம் மக்கள் இங்கு வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாரணாசி நகருக்கு 30 கிலோ மீட்டருக்கு வெளியே நிறுத்தப்படுகிறது.

அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்காகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு உள்ளது.

வாரணாசிக்கு புறநகர் பகுதியில் இருந்து கோவிலுக்கும், கங்கை நதிக்கும் பஸ்களில் இலவசமாக அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் வயதானவர்கள், நோயாளிகளுக்கு அவர்களை கோவில் செல்வதற்கு சிறப்பு வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கூடுதலாக படித்துறைகளிலும் கூடுதல் பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளது. இங்கு 84 படித்துறைகள் உள்ளன. அதில் 21 படித்துறைகள் பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் நீராடுவார்கள். எனவே கங்கை கரையிலும் அதிகமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *