உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலந்துகொண்டு பேசியதாவது:-
உசிலம்பட்டி பகுதி மக்கள் எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் கட்சிக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து வெற்றி பெறச் செய்தவர்கள் உசிலம்பட்டி மக்கள் தான். ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
ஆனால் தி.மு.க. இன்று மக்களை கசக்கி பிழிகிறது. ஆட்சிக்கு வந்த இந்த 46 மாதத்தில் எதையும் செய்ய வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.
காவிரி, முல்லைப் பெரியாறு நதிகளுக்கு மிகப் பெரிய தீர்வை பெற்றுத்தந்து மத்திய அரசிடமிருந்து நிதியை முறையாக பெற்று சிறப்பு திட்டங்களையும் தமிழகத்தின் உரிமைகளையும் நிலைநாட்டினார்.
தி.மு.க. மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பாதிப்படைகின்றனர்.
தினந்தோறும் ஜாதி அடிப்படையிலும், மொழி ரீதியிலும் வன்முறைகள் தான் தொடர்கிறது. பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி காலத்தை நகர்த்தி அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என தி.மு.க.வினர் பகல் கனவு காண்கின்றனர்.
அதை முறியடிக்க வேண்டும். தமிழகத்தை அ.தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.
ஜெயலலிதாவின் மறை விற்கு பிறகு அ.தி.மு.க. பல நெருக்கடி சவால்களை சந்தித்தது. இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலி தாவின் கனவை கோடிக்கணக்கான தொண்டர்கள் மனதில் தாங்கி நிற்கிறார்கள்.
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகும். விருப்பு, வெறுப்புகளை மறந்து பொதுநலத்துடன் செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா என்னும் நான் என்று, நம் தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ இந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வாக வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.
தமிழக மக்களின் நம்பிக்கையும் இது தான். அனைவரும் ஒன்றிணை வோம், வென்று காட்டு வோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வருகிற காலம் பொற்காலமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கச் செய்து வெற்றி பெற வைப்பதே எனது லட்சியம்.
இவ்வாறு அவர் பேசினார்.