தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் – சீமான் … 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறுசீராய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மத்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் நாம் வரி செலுத்துகிறோம். ஆனாலும் நமக்கு போதிய நிதியை அவர்கள் அளிக்கவில்லை என்று திமுக ஆட்சியாளர்கள் புலம்புகின்றனர்.

இதற்கு ஏன் அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம். பிகார் மாநிலத் தால் பெற முடிகிறது. உங்களால் முடியவில்லையா?

நாதக ஒரு ஜனநாயக கட்சி. இதில், பொறுப்பாளர்கள் கொள்கை, கோட்பாடுக்கு உடன்பட்டு வருகிறார்கள். பின்னர், முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம்.

மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்ற கட்சிகளை விடுங்கள்.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம். பாஜகவுடன் சேர்ந்து என் மொழியை அழித்ததற்கு, திராவிட கட்சிகளுக்கும் பெறும் பங்கு உண்டு.

மேலும், ஜாக்டோ-ஜியோ பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அரசுக்காக அவர்கள் போராட்டத்தின் வீரியத்தை குறைக்காமல், தீவிரப்படுத்தலாம்.

தேர்தல் வரும் சமயத்தில் முதல்வரின் மருந்தகம் என்பது மக்களிடம் வாக்குகளை பெற ஒரு கவர்ச்சியான திட்டமாக பார்க்கப்படுகிறது.

நோய் வந்த பிறகு மருந்து எதற்கு? மக்களுக்கு தேவையான தூய காற்று, குடிநீர் மற்றும் நஞ்சில்லா உணவை கொடுக்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதை எடுத்து பேசுகிறேன்.

அவரை பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் என் வீட்டின் மீது குண்டு போடுகிறார்கள். பேச ஆரம்பித்தால் என்னவாகும்? நான் இருக்கும்போது போடுங்கள், பார்ப்போம்.

2026-ம் ஆண்டு தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். அதுகுறித்த விவரங்களை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம்.

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை மக்கள் சொல்லவில்லை. நீட் தேர்வு ரத்து, கூட்டுறவு கடன் தள்ளுபடி, காஸ் சிலிண்டர் விலை குறைப்பு எதையும் செய்யவில்லை.

சொத்து வரியை ஏற்றி விட்டார்கள். ஈரோடு நகராட்சியில் தேர்தலுக்கு பிறகு 6 சதவீதம் வரி உயர்த்தி உள்ளனர். இவர்கள் மக்கள் ஆட்சியை துளியும் செய்யவில்லை. கட்சி, தேர்தல் அரசியல் செய்கிறார்கள்.

செயல், சேவை ஆட்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *