டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் 1,100 பேர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு!!

சென்னை:
டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் 1,100 பேர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

இந்த முறைகேட்டை கண்டித்து எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை 17-ம் தேதி முற்றுகையிடப்போவதாக தமிழக பாஜக அறிவித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போராட்டத்துக்கு சாலிகிராமத்திலிருந்து புறப்பட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை வீட்டுக்கு வெளியே முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.

இதேபோல், போராட்டத்தில் கலந்து கொள்ள பனையூரிலுள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதுமட்டும் அல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அமர்பிரசாத் ரெட்டி, நாராயணன் திருப்பதி உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வந்த நூற்றுக்கணக்கான பாஜவினரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதோடு மட்டும் அல்லாமல் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்திய பாஜகவினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்டுவிட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், இரவு 7 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் சுமார் 1,100 பேர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *