மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!

சென்னை:
மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.

இது தொடர்பான கோப்பு முதல்வர் மேஜையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வாடகை வாகனங்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கி.மீ.க்கு ரூ.76 வசூலிக்கின்றன.

அத்தகைய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ரூ.100-க்கு ரூ.30 வரை கமிஷன் எடுக்கின்றன. எனவே, ஆட்டோக்களுக்கான செயலியை அரசே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுவும் நிலுவையில் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை எதிர்த்துவிட்டு, தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட புகார்களை பெற க்யூ-ஆர் கோடு ஸ்டிக்கரை ஆட்டோக்களில் ஒட்டும் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை காவல் துறை பரிசீலிக்காமல் அமல்படுத்தியுள்ளது.

காலை 6 முதல் மாலை 6 வரை: இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் சார்பில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

சென்னை நகரில் இயங்கும் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீதம் ஆட்டோக்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. ஆட்சியர் அலுவலகம், ராஜரத்தினம் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *