சென்னை:
ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராக பார்க்கப்பட்ட தமிழக காவல்துறை இன்று செயலிழந்து நிற்கிறது என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நேற்றையை தினம் நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்து எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவையில் அனுமதி கேட்டு பேச முற்பட்ட போது, ஏற்கனவே முன்அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பேச வேண்டும் என சட்டப்பேரவை தலைவர் தெரிவித்தார்.
நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்சினையை எழுப்புவது எதிர்கட்சிகளின் கடமை. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, சட்டப்பேரவையில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல், நாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக பேசியிருக்கிறது.
அந்தவகையில்தான் கொலை சம்பவங்கள் குறித்து நாங்கள் பேச முற்பட்ட போது, சட்டப்பேரவை தலைவர் குறுக்கிட்டு, நாங்கள் பேச முடியாத சூழலை உருவாக்கினார்.
தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதனை அரசின் கவனதுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நேரமில்லா நேரத்தில் அதிமுக பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்க்கெட்டுள்ளது.
அதற்கு நேற்று நடந்த சம்பவங்களே உதாரணம். ஸ்டாலின் அரசு செயலற்று கிடப்பதால் தான் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 4 கொலைகள் நடந்துள்ளது. இவற்றை காவல்துறை கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு காவல்துறையை கண்டால் அச்சமில்லை. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக பார்க்கப்பட்ட தமிழக காவல்துறை இன்று செயலிழந்து நிற்கிறது. தமிழகத்தில் காவல்துறை என ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே இருக்கிறார்கள். இதைப்பற்றி தான் சட்டப்பேரவையில் பேச முற்பட்டோம்.
ஆனால், முதல்வர் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கொலைகளை ஒப்பிட்டு பேசுகிறார். மக்களின் உயிருடன் விளையாடக்கூடாது. தினசரி தங்கம் விலை நிலவரம், வானிலை நிலவரம் போல, தினசரி கொலை நிலவரம் என்ற நிலைக்கு தமிழகம் வந்துவிடக்கூடாது.
நாங்கள் திமுகவுக்கு பயந்து வெளிநடப்பு செய்யவில்லை. எங்களை சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காத காரணத்தினால் தான் வெளிநடப்பு செய்திருக்கிறோம். அரசியல் தலைவர்கள், பெண்கள், பெண் குழந்தைகள் என ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தான் உள்ளது.
திமுக அரசை கண்டு அஞ்சும் கட்சி அதிமுக கிடையாது. நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு குறித்து பேச வேண்டிய இடத்தில் பேசாமல், இங்கே அனைத்து கட்சி கூட்டம் கூட்டி பேசுகிறார்கள். இது நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை.
தவறு செய்யவில்லையென்றால் அமலாக்கத்துறை சோதனையை கண்டு திமுக ஏன் அஞ்சுகிறது. நெடுஞ்சாலைத்துறையில் நான் ஊழல் செய்ததாக தொடுத்த வழக்கில் நீதிமன்றம் வரை சென்று நிரபராதி என நான் வெளியே வந்தது போல, நீங்களும் நீதிமன்றம் சென்று நிரபராதி என வெளியே வாருங்கள்.
டாஸ்மாக்கில் தவறு நடந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் எங்கு சென்றுள்ளது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை முழு விசாரணையை முடித்த பிறகு, யாரெல்லாம் சிக்குவார்கள் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.