அரியலூர்
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மகன் கலைமணி (25). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(56) என்பவருக்குமிடையே கழிவுநீர் கால்வாய் சம்பந்தமாக பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரவிச்சந்திரன், அவரது மகன் அரவிந்தன்(32), ரவிச்சந்திரன் தம்பி சேகரின் மனைவி வளர்மதி(50), அவரது மகன்கள் அகிலன்(26), கபிலன்(25), பவித்ரன்(23), ரவிச்சந்திரனின் தங்கை கலா(45), அவரது கணவர் குருசாமி(52) ஆகியோர் சேர்ந்து கலைமணியை தாக்கினர். அப்போது, கலைமணியை அவரது தந்தை கந்தசாமி மீட்டு, வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். இதனால் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கந்தசாமியையும் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த கந்தசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக செந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.மலர் வாலண்டினா, குற்றம்சாட்டப்பட்ட ரவிச்சந்திரன், அரவிந்தன், வளர்மதி, அகிலன், கபிலன், பவித்ரன், கலா, குருசாமி ஆகிய 8 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நீதிபதி தீர்ப்பளித்தவுடன் கலா தனது கழுத்தில் துண்டை சுற்றிக்கொண்டு, நீதிமன்றத்திலேயே தூக்கு போட்டுக்கொள்ளப் போவதாகக் கூறி ஓடியுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை மீட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
தொடர்ந்து, தண்டனை பெற்ற 8 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொலை நிகழ்ந்த காலகட்டத்தில், பெரியாக்குறிச்சி ஒன்றியக் குழு பாமக கவுன்சிலராக கலா பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.