சென்னை;
முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை மறியல் மற்றும் ரயில் போராட்டம் நடைபெற்றது.
தடையை மீறி இந்த போராட்டம் நடந்ததாக கூறி அறியலூர் போலீசார் அப்போதைய மாவட்ட செயலாளர் தற்போதைய அமைச்சருமான சிவசங்கர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அரியலூர் மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றதாகவும் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றும் எனவே தன் மீதான ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் ஆ ராசா சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கு என்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆ ராசா மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர் சிவசங்கர் மீதான வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.