ஒரு சதவீதம் கூட மீனவர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: சீமான்!

சென்னை:
மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒரு சதவீதம் கூட மீனவர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என விமர்சித்தார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவர்கள் நலனை உறுதி செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பில் தங்கச்சிமடம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இது நம் மீனவர் பிரச்சனை அல்ல.. நம் உரிமை பிரச்சினை.. கடற்கரையில் சமாதிகள் கட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என நாம் சொல்வது மீனவர் வாழ்வுரிமைக்காக அல்ல, கடற்கரை தமிழனுடைய கடற்கரை என்னுடைய பொது சொத்து அதில் யாருக்கும் இடம் கிடையாது. தாத்தாவுக்கு கிடையாது யாருக்கும் கிடையாது.

இந்த நாட்டை ஆண்ட பிரதமர் யாராவது கடற்கரையில் கல்லறை கட்டி படுத்திருக்கிறார்களா? இந்திய நாட்டிலே மொத்தம் எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள்.

அதில் யாராவது கடற்கரையில் கல்லறை அமைத்து இருக்கிறார்களா. நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று ஆளாளுக்கு இரண்டு இரண்டு ஏக்கரில் சமாதி கட்டி படுத்திருக்கிறீர்கள்.

எங்கள் பாட்டனை போல விடுதலைக்காக செக்கு இழுத்தீர்களா? தூக்கில் தொங்கினீர்களா? சிறைப்பட்டீர்களா? மிதிபட்டீர்களா? ஒன்றும் இல்லை.

அதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு வெறி வரும் எங்களை எல்லாம் சுடுகாட்டில் போட்டுவிட்டு நாட்டையே சுடுகாடாய் ஆக்கிவிட்டு நீங்கள் கடற்கரையில் குதூகலமாக படுத்து இருக்கிறீர்கள்.

மீனவர்கள் எல்லாம் பேராசைப்பட்டு எல்லை தாண்டி போனார்கள் என்கிறார்கள் நீங்கள் எதற்கு அங்கே படுத்திருக்கிறீர்கள்.

இதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நான் கேட்பேன். நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும்.

உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கை பார்க்குமா?

இலங்கை கடற்படையிடமிருந்து நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை? குஜராத் மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றால் கொதித்தெழுந்து கொலை வழக்குப் பதிந்து, போர் முழக்கமிட்டு ஐ.நா.மன்றம் வரை அபாய மணியடிக்கும் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள், இதுவரை 800க்கும் மேற்பட்ட எம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல் லப்பட்ட போதிலும் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன்? தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால் தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழராய் பிறந்ததைத் தவிர எம் மீனவர் செய்த பிழை என்ன? இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *