உத்தரபிரதேச தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர் பாரதிய ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரல்!!

லக்னோ:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் கடந்த 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற்றது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஓட்டுப்பதிவின் போது, இந்த தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர் பாரதிய ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை அவரே எடுத்துள்ளார்.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்… பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.

இதேப்போல அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேச தேர்தல் ஆணையர் கூறுகையில், இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அலுவலர் பிரதீத்திரிபாதி நயா காவ்ன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசார ணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ராஜல்சிங் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (தேர்தல் தொடர்பான குற்றம்), 419 (நபர் மூலம் ஏமாற்றியதற்கான தண்டனை) மற்றும் 128, 132, 136 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *