”கூட்டணிக்கு எல்லாரும்தான் அழைக்கின்றனர், அதற்கு நன்றி” – தோல்விகளை தாண்டி தனித்துதான் போட்டி- சீமான் உறுதி!!

சென்னை:
‘கூட்டணிக்கு அழைக்கிறார்கள், அதற்கு நன்றி. ஆனால் வெற்றி, தோல்விகளைத் தாண்டி தனித்துதான் போட்டி’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை மாவட்டத்தில் மே.18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம், சென்னை கே.கே.நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு கட்சியை தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்து அழைப்பது இயல்புதான்.

ஆனால் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான். தேர்தல் அரசியல், கட்சி அரசியல் செய்பவர்கள்தான் கட்சிகளைத் தேடி, கட்சி தலைமையை, தலைமை அலுவலகங்களை தேடிச் செல்வார்கள். நாங்கள் மக்கள் அரசியல் செய்பவர்கள்.

அந்தவகையில் ஏற்கெனவே தொடர்ச்சியாக 2 சட்டப்பேரவை, 2 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறோம். வெற்றி, தோல்விகளைத் தாண்டி 5-வது முறையும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சிதான்.

2026 தேர்தலில் 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். 134 தொகுதிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அரசியல் வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள் இருக்கின்றன.

அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். அதேபோல் பல பொதுத் தொகுதிகளில் ஆதி குடிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

கூட்டணிக்கு எல்லாரும்தான் அழைக்கின்றனர். அதற்கு நன்றி. ஆனால் எங்களுடைய பயணம் எங்களது கால்களை நம்பிதான் இருக்கும். பிறர் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதைவிட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது.

கூட்டணி வைத்து 10 சீட்டுகள் வென்று, சட்டப்பேரவைக்கு சென்று பேசினாலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

அதற்கு வெளியில் இருந்தே பேசிவிடலாம். எங்களுக்கென்று ஒரு கனவு இருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனித்துதான் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *