“உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு?” – பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…..

“இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு?” – பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி!!

“இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு?” என்று நூறு நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் மவுனமாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?

கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஜ்கார் அண்டு அஜீவிகா மிஷன் (VBGRAMG) குறித்து எதிர்க்கட்சியான அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?

மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டுள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில். நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா.

உங்கள் தலைவி ஜெயலலிதா இருந்திருந்தால் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்?

இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *