ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றால் அதற்கு மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தர முடியாது – ஆதவ் அர்ஜுனா!

சென்னை:
கோவையில் தவெகவின் பூத் கமிட்டி மாநாடு கடந்த இரு நாட்களாகக் கோவையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். நேற்று முதல் நாள் மாநாடு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக மாநாடு நடைபெற்றது.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த இந்த தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். குறிப்பாக வக்பு வாரிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

வக்பு வாரிய சட்டத்திற்கு முதலில் போராட்டத்தை அறிவித்தது தவெக தான் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, வக்பு வாரிய விவகாரத்தில் விஜய் உச்ச நீதிமன்றத்தை நம்பினார் என்றும் தமிழகம் முழுக்க போராட்டத்தையும் தவெக நடத்தியது என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:-

ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றால் அதற்கு மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தர முடியாது. தமிழக அரசு வக்பு சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது உண்மைதான்.

அதை வரவேற்கிறோம். ஆனால், அதை வைத்து அழுத்தம் தர முடியாது. கேரள அரசு வக்பு வாரிய விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, வக்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்.

விஜய் ஏன் 3 நிமிடம் மட்டுமே பூத் கமிட்டி மாநாட்டில் பேசினார் எனச் சிலர் கேட்கிறார்கள். அவர் 3 நிமிடம் பேசியதற்கே கோவை ஸ்தம்பித்துவிட்டது. எனவே, எங்கள் திட்டம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எங்கள் தலைவர் விஜய்யின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து கொள்வோம். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பாதுகாப்பைக் கொடுங்கள் அதுவே போதும்.

தேர்தல் நடக்கும்போது மூத்த நிர்வாகிகளைக் காட்டிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே அதிக பவர் இருக்கிறது. வாக்குப்பதிவின்போது கடைசி இரண்டு மணி நேரம் வாக்களிக்காதவர்களின் லிஸ்ட்டை வைத்து கள்ள ஓட்டுப் போட வாய்ப்பு இருக்கிறது. அதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும். நீங்கள் அது குறித்து குரல் எழுப்பினால்..

உடனே தலைமையின் ஆதரவு வந்துவிடும். அதன் பிறகு அவர்களால் வாக்குப்பெட்டிக்குச் சீல் வைக்க முடியாது.

அதேபோல வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் உறுதி செய்ய வேண்டும். அதுவே பிரதானமானது.

இத்தனை காலம் தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தது. இப்போது எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *