கோவை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் ரெயிலில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரெயில் பயணங்களில் கூட்ட நெரிசல்களை குறைக்கும் வகையில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி தீபாவளியையொட்டி கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு MEMU ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று(17-ந்தேதி), நாளை(18-ந்தேதி), 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி ஆகிய நாட்களில் காலை 9.35 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் கோவையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக திண்டுக்கலில் இருந்து இன்று, நாளை, 21 மற்றும் 22-ந்தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.