சென்னை:
செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, 2023 ஜூன் 14 அன்று அவரை கைது செய்தது. கைது நேரத்தில் அவர் திமுக அமைச்சராக இருந்தார். அமலாக்கத் துறை, “அவரைப் பதவியில் தொடர விடக்கூடாது” என உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது.
பின்பு, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, நீண்ட கால சிறை வாழ்கையின் பின்னர், 2024 செப்டம்பர் 26-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சில நாள்களில் மின்துறை அமைச்சர் பதவியையும் மீண்டும் ஏற்றார்.
செந்தில் பாலாஜி மீண்டும் பதவியேற்றதால் சாட்சிகள் பாதிக்கப்படக் கூடும் எனும் ஆபத்தைக் காட்டி, பாதிக்கப்பட்டர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால், “அமைச்சர் பதவியா? ஜாமீனா?” என அவர் ஒன்று தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஏப்ரல் 28 வரை அவகாசம் அளித்தது. இதனிடையே செந்தில் பாலாஜி நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த விசாரணையின் போது அமைச்சர் பதவியா?, ஜாமினா என கேள்வி எழுப்பி இருந்தது உச்சநீதிமன்றம்.
ஓரிரு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகினார். செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள்.