தமிழக சட்டசபையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !!

சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சரால் 18.11.2023 அன்று சட்டசபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந்தேதியன்று பிறப்பித்த தீர்ப்பின்படி, அந்த மசோதாக்களுக்கு 18.11.2023 அன்றே ஒப்புதல் பெறப்பட்டதாக கருதப்படுகிறது.

அந்த பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், மாற்றுத்திறன் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016-ன் (மத்திய சட்டம்) 3-ம் பிரிவின்படி, பல்கலைக்கழகங்களின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவதற்கு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான தகுதியின்மையை நீக்குவதற்கு, சில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்து உள்ளது.


மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று அவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *