கோவை:
அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களது பெயர்களை வெளிப்படுத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு 250 பக்க கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. தேர்தல் ஆணைய விதிகளின்படி அவற்றை வெளியில் சொல்ல முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்துப் பாருங்கள். நல்லதே நடக்கும்.
அதிமுக கட்சி விவகாரங்களில் பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகன் ஆகியோர் தலையிடுகின்றனர். அவர்கள் தொகுதி வாரியாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகள் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக உள்ளன.
அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். என்னுடன் யார், யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும், எனக்கும் மட்டும்தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால், அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நான் கடந்த 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது. மூத்த நிர்வாகியான என்னை அதிமுகவில் இருந்து நீக்கியது ஏன் என்று பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது அவரது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.