புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய ராணுவம் அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மே 8 – 9 இடைப்பட்ட இரவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கான பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதி களின் ஏவுதளங்களைக் குறிவைத்து அழித்தது. அவை தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன.
இந்த ஏவுதளங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ளன. இங்கிருந்துதான் இந்திய மக்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல் சதிகள் முன்பு நடத்தப்பட்டன.
இந்திய ராணுவத்தின் அதிரடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளின் இயங்குதிறனுக்கு பலத்த அடியாக இறங்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.