சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவு!!

சென்னை:
சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மாதம் 28-ம் தேதி உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (63) கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதோடு, அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.

இதே பாணியில் திருப்பூரிலும் கொலை, கொள்ளை நடந்தது. இதில், தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முதியோர்கள் தனிமையில் வசிப்பதை நோட்டமிட்டு கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக கொலையாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதையடுத்து, தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், சென்னையில் வசிக்கும் முதியவர்கள், குறிப்பாக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக வசித்து வரும் முதியோர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

விவரம் சேகரிப்பு: குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீஸாரும் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்களின் விவரம், தொடர்பு எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இந்த விவரங்களை காவல் நிலையங்களில் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முதியோர்கள் வசிக்கும் வீடுகளுக்கு தினமும் போலீஸார் கட்டாயம் சென்று அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தனியாக வசிக்கும் முதியோருக்கு மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய உதவி ஏதேனும் தேவையாக இருக்கிறதா என்பதையும் போலீஸார் கேட்டறிய வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களையும் காவல் ஆணையர் அருண் வழங்கி உள்ளார்.

மேலும், இரவு மட்டும் அல்லாமல் தேவைப்படும் நேரங்களில் ரோந்து பணிகளை முடுக்கி விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயலி, அவசர உதவி எண்​கள்: சென்னை காவல் துறையில் முதியவர்கள் பாதுகாப்பு நலனை மையப்படுத்தி மூத்த குடிமக்கள் பாதுகாப்பு செயலி, 14567 மற்றும் 1800 180 1253 ஆகிய முதியோர் அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை போலீஸார் தினமும் வீடுகளுக்கே சென்று முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதை, பெற்றோரை விட்டு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்று வசிப்பவர்கள் வரவேற்றுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *