சென்னை;
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையில் அதிகாலை தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
குறிப்பாக சமூக நலன் சார்ந்து இயங்கி வருவோர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சாதாரண பொதுமக்கள் தொடங்கி, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பது மட்டுமே திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என தமிழக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, இனியாவது அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.