தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் நீதிபதிகள் விரைவில் உறுதியான தீர்ப்பை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!!

தூத்துக்குடி
தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
இன்றும் 8, 9 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற ஜனவரி 9-ந் தேதி கடலூரில் தே.மு.தி.க. சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்குள் கூட்டணி உள்ளிட்டவை எல்லாம் முடிவு செய்து மிகப்பெரிய அறிவிப்பாக இந்த மாநாடு இருக்கும்.

அமலாக்கத்துறை சோதனை நடப்பது ஒன்றும் புதிதல்ல, எப்போதும் நடக்க கூடியது தான். தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து லஞ்சமாக பெற்றால் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

அமலாக்கத்துறை சோதனையில் உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். விஜயகாந்த் சொன்னது போல் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.


தனி நபருடைய விஷயத்தை அரசுக்குள் கொண்டு போக கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பு கூறி உள்ளது. விசாகன் ராஜா என்ற தனி நபர் மீது ரூ.1000 கோடி ஊழல் வழக்கு கொண்டு வரப்படுகிறது. அது தனி நபரை சார்ந்ததா? அல்லது டாஸ்மாக் துறையை சார்ந்ததா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தி.மு.க. அரசு இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்களால் பெண்களை மூளைச்சலவை செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள். பெண்கள் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக்கினால் பாதிக்கப்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் குடியாக இருக்கிறது.

இளைஞர்களிடம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் தான். அதனால்தான் இன்று பலவிதமான கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டு உள்ளது.

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நீட்டாக இருந்தாலும், டாஸ்மாக் ஒழிப்போம் என்பதாக இருந்தாலும், விலைவாசியை குறைப்போம் என்பதாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றவில்லை. பல்வேறு விஷயங்கள் செயல்படுத்த வேண்டும். இன்னும் 8, 9 மாதங்கள் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.
அவர்கள் 2026-ல் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்த பிறகு சலசலப்புகள் வந்தால் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் கண்ட்ரோல் செய்கிறார்கள். யாரும் தனிப்பட்ட கருத்துக்களையோ எதிர் கருத்துக்களையோ திணிக்க வேண்டாம்.

பொறுமையாக இருந்து இந்த கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடை தான் எடுப்பார்கள். அந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர்.


பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போன்று, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் நீதிபதிகள் விரைவில் உறுதியான தீர்ப்பை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *