சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.
இந்த போட்டியில் 278 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.
மேலும், ஒரு புதிய உலக சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.
ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரி கவுன்டி அணியும் (தலா 3 முறை) உள்ளன.