பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் கொண்டு வரப்பட்டது.
அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரதவீதிகளில் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளி தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறும்.
அன்று மாலை 4.30 மணிக்குமேல் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். 4 ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.