புதுடெல்லி:
பா.ஜ.க. அரசு அமைந்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமராக 3-வது முறையாக பதவியேற்று ஓராண்டு முடிவு பெறும் நிலையில் பா.ஜ.க. ஆட்சி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
நல்லாட்சி மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதத்தாலும், கூட்டு பங்கேற்பாலும் இந்தியா பல்வேறு துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேகம், அளவு, உணர் திறன் கொண்ட புதிய மாற்றங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் இருந்து சமூக மேம்பாடு வரை மக்களை மையமாக கொண்ட உள்ளடக்கிய மற்றும் அனைத்து வகையான முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறது.
எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைபடுகிறோம். இந்தியாவின் முன்னேற்றத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கை மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளோம்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார். மாற்றத்துக்கான இந்த பயணத்தில் நமோ செயலி உங்களை புதிய வழியில் அழைத்து செல்லும் என்றும், அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.