திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் !!

திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


விசாகத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாராதனையும் தொடர்ந்து கோவில் சண்முக விலாசம் மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவமும் நடக்கிறது.

வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் இன்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்களின் அரோகரா கோஷம் விண் அதிர செய்தது.


சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.

பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக நேற்று காலை 8 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி.ட.பிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது.

இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 6 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கை பட்டை வழங்கப்படுகிறது.

கைப்பட்டை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் முதியோர்களுக்கான தனி வரிசையில் எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *