குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து!!

அகமதாபாத்:
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி இன்று (வியாழக்கிழமை) மதியம் 1.10 மணி அளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்து கரும்புகை பெருமளவில் வெளியாகி வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து ஒன்பதரை மணி நேரம் பயணித்து லண்டன் செல்லக்கூடியது என்பதால், விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்தது என்றும், தீ அணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன என்றும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் கடியா தெரிவித்துள்ளார்.

“விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இது எந்த வகையான விமானம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.”

என்று அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறினார். விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியுள்ளார். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

விமான விபத்து குறித்து தெரிவித்துள்ள சிவில் ஏவியேஷன் அமைச்சர் ராம் மோகன் நாயுடு “அகமதாபாத் விமான விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். அவசர காலங்களில் செயல்பட வேண்டிய அனைத்து நிறுவனங்களையும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

மீட்புக் குழுக்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விமானத்தில் உள்ள அனைவர் குறித்தும் அவர்களின் குடும்பத்தினர் குறித்துமே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *