குஜராத்;
குஜராத்தின் அகமதாபாத், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான விமான விபத்தை நேற்று கண்டது.
சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு AI 171 ட்ரீம்லைனர் பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவ மாணவர்கள் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 241 பேர் இறந்ததாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கறுப்புப்பெட்டி தகவல்களை வைத்தே விபத்துக்கான காரணம் தெரியவரும்.
அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு அக்டோபர் 19, 1988 அன்று விபத்து நிகழ்ந்தது.
அன்று, மும்பையிலிருந்து அகமதாபாத் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 164 பேர் உயிரிழந்தனர். பழைய விமானம் என்பதால் பழுதுபட்ட தன்மையே இந்த விபத்துக்கான காரணம்.
கடந்த 65 ஆண்டுகளில், நாட்டில் 19 விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதன் விளைவாக 1000-த்திற்கும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய பெரிய விமான விபத்துகள்:
ஆகஸ்ட் 7, 2020 அன்று, ஏர் இந்தியா IX 344 துபாய்-கரிப்பூர் விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது 35 அடி உயரத்தில் விழுந்து 18 பேர் கொல்லப்பட்டனர்.
மே 26, 2011 அன்று, அரியானாவின் ஹரிதாபாத்தில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
மே 22, 2010 அன்று, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737-800 விமானம் மங்களூரின் பாஜ்பாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 158 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை 17, 2000 அன்று, பீகாரின் பாட்னா விமான நிலையத்திற்கு அருகில் அலையன்ஸ் ஏர் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
நவம்பர் 1996, அரியானாவில் சர்கி தாத்ரி நகரின் மீது சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 350 பயணிகள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 1993, அவுரங்காபாத்தில் புறப்படும் போது இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விபத்துக்குள்ளானதில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 1991, கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம், மணிப்பூரின் தலைநகரான இம்பால் அருகே தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 69 பேரும் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 1978, மும்பை கடற்கரையில், புறப்பட்டவுடன் விமானத்தின் கேப்டன் கட்டுப்பாட்டை இழந்து, அரபிக் கடலில் விழுந்ததில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 213 பயணிகளும் கொல்லப்பட்டனர்.