நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி பெற்றாலும் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் 4-வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1 லட்சத்து 35,715 பேரில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேருக்கு முதல்கட்டமாக 80 மனநல ஆலோசகர்களை கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் 600 மாணவ, மாணவிகளை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தனிமையை தவிர்த்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமின்மை, பசியின்மை, தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணம், தொடர்ந்து அழுது கொண்டிருப்பது, அதிகமாக கோபம் கொண்டு அருகில் இருப்பவர்களிடம் பேசுவது, பயத்தோடு, பதற்றத்தோடு இருக்கும் மாணவர்களை நிதானப்படுத்துவதோடு, அவர்களுக்கான மன அமைதியை ஏற்படுத்துகின்ற வகையில் இந்தப் பயிற்சி பயன்படும்.

தமிழகத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு 11,850 இடங்கள் மட்டுமே உள்ளன. நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து, பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.

நீட் தேர்வு இல்லாமலேயே நேரடியாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து சேரக்கூடிய கால்நடை மருத்துவம், யோகா போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் மனநலனை திடப்படுத்திடும் வகையில் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகள், அவர்களுக்கு அறிவித்திடும் வகையிலும் ஒரு முயற்சியாக மனநல ஆலோசனை பயிற்சி தொடங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *