சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டு மக்கள் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
நேற்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு இதற்கு சாட்சி. மதுரை வண்டியூர், பாண்டி கோவில், சுங்கச்சாவடி பகுதியில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டு வளாகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு, முருகரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெரிதும் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடவுள் முருகன் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கடவுள்.
அந்த நம்பிக்கைக்கு ஏற்ப தமிழர்கள் பெருந்திரளாக முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு முருகரை தரிசித்திருப்பது வாழ்த்துக்குரியது. முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி நானும் அங்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தது மனதிற்கு திருப்தியை அளித்தது.
குறிப்பாக ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க முருக பக்தர்கள், சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர், சாய்பாபா பக்தர்கள், ஆன்மிகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று முருகரை தரிசனம் செய்திருப்பது பெருமைக்குரியது.
முருகனை காணச் சென்றவர்கள் அனைவருக்கும் குடிநீர், பிரசாதம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டது. முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்த அனைவரும் முருகனின் அருளும், ஆசியும் பெற்று வாழ்வில் முன்னேறுவார்கள்.
தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் முருக பக்தர்கள் மாநாடு வருங்காலத்தில் நல்லது நடக்க, நன்மை பயக்க வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆன்மிகம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதற்கு தடை ஏற்படுத்தினால் ஆன்மிக சக்தி அந்த தடைகளை தகர்த்தெரியும் என்பது இந்த மாநாட்டின் வெற்றி மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.
மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து மிகச்சிறப்பாக நடத்தியிருக்கும் இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.